அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான உள்ளான சம்பவம் தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த 10 ஆம் தேதி இரவு வேளையில் நடந்த இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், அனுராதபுரம் பொலிசார் "பி" அறிக்கை ஊடாக அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன்படி, அன்றைய தினம் என்ன நடந்தது என்பது தொடர்பில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான வைத்தியர் போலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் சுருக்கத்தை நீதிவானுக்கு பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.
தான் சேவையை முடித்துக் கொண்டு ருவான் வெலிசாயவுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் மீள வைத்தியசாலைக்கு வந்து விசேட வைத்திய நிபுணர்கள் விடுதியில் ஒன் கோல் சேவைக்கு தயாராக இருக்கும் பொருட்டு சென்ற போது சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக தமக்கு வாக்குமூலம் அளித்துள்ளதை பொலிசார் நீதிவானுக்கு அறிக்கை ஊடாக தெரிவித்தனர்.
" நான் என் சேவையை முடித்துக் கொண்டு, ருவான்வெலிசாயவுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு விடுதிக்கு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்தது. 10ஆம் தேதி பிற்பகல் 3:30 மணி வரை தன் சேவையில் இருந்தேன். எனது கடமைகளை முடித்துக் கொண்டு, வீடு திரும்பி பின்னர் முச்சக்கர வண்டியில் ருவான்வெலிசாயவுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டேன். பின்னர் மாலை 6:30 மணியளவில் மீண்டும் முச்சக்கர வண்டியில் விடுதிக்கு திரும்பினேன்.
அவ்வாறு திரும்பி அறைக்குள் நுழைய கதவை திறந்த போது, எனக்கு பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்தேன். யார் என திரும்பிப் பார்க்கும்போது, எனது அறைக்கு முன் அறையின் கதவில் சாய்ந்து நின்ற ஒருவர் எனது கழுத்தில் கத்தியை வைத்து மற்றொரு கையால் எனது வாயை பொத்தி கத்த வேண்டாம் என்றும் கதவை திறக்குமாறு கூறினார்.
அவர் விடுதியின் கதவை என்னை கொண்டு திறக்கச் செய்தார் என் கழுத்தில் கத்தியை காட்டி கொலை செய்வதாக மிரட்டினார். பின்னர் என்னை அறைக்குள் தள்ளினார்.
என் தொலைபேசி கடவுச்சொல்லை அகற்றிக்கொண்ட சந்தேக நபர், தொலைபேசியில் ஹிந்தி பாடல்களை ஒலிக்கச் செய்தார் "சத்தம் போடாதே சத்தமிட்டால் கழுத்தை அறுத்து விடுவேன்" என்றார்.
ஒரு கட்டத்தில் நான் அந்த நபரை அவர் வைத்திருந்த கத்தியை பறித்து குத்த முயன்றேன். இதன் போது என் கை காயப்பட்டது. நான் கத்தியால் குத்த முயன்றதால் அந்த நபர் மிகவும் கோபமடைந்தார். அப்பொழுது நான் கொல்லப்படுவேன் என்று பயந்தேன் என நடந்தவற்றை வைத்தியர் வாக்கு மூலமாக போலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிசார் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டனர்.
பொலிசார் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான பெண் வைத்தியரின் வாக்குமூலம் ஊடாக தெரியவந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றுக்கு அளித்துள்ள அறிக்கையில் சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் அங்கிருந்து வெளியேறும் போது
"நான் போனை எடுத்துச் செல்கிறேன், மீண்டும் நாம் சந்திக்க போவதில்லை இங்கு நடந்துவற்றை புகைப்படமாக எடுத்துள்ளேன். இதனை யாரிடமும் கூறக்கூடாது அப்படி கூறினால் உனக்குத்தான் பிரச்சனை என்னை மன்னித்துவிடு" என்று சந்தேக நபர் வைத்தியரிடம் கூறிவிட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
துஸ்பிரயோகத்துக்கு உள்ளான வைத்தியரின் வாக்குமூலப்படி சந்தேக நபர் சுமார் 5 அடி 8 அங்குல உயரம் உள்ளவர். அவர் மேல் சட்டை அணிந்திருக்கவில்லை. தலைமுடியை கட்டையாக வெட்டி இருந்தார். ஒழுங்கற்ற முறையில் அழுக்கான நபராக இருந்தார். 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஒருவர் என சந்தேக நபரின் அடையாளங்களை குறிப்பிட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றுக்கு அறிக்கை ஊடாக குறிப்பிட்டனர்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முன்னர் சந்தேக நபர் அறையின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு சுற்றுப்புறத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் மலசலக்கூடத்தின் மின் விளக்கை மட்டும் ஒளிர செய்துள்ளதாக வைத்தியரின் வாக்குமூலத்தின் கூறப்பட்டுள்ளது.
நான் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவன். பொலிஸ் என்னை தேடிக் கொண்டிருக்கிறார்கள் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகிறேன். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் சத்தம் போடாதே நீ சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் அது எனக்கு பெரிய பிரச்சனை இல்ல என அச்சுறுத்தியதாக வைத்தியர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கட்டிப்போட்டு விட்டு சென்றதாகவும் ஒருவாறு கட்டுகளை அவிழ்த்துவிட்டு அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்குச் சென்று தான் பணிபுரிந்த வார்டில் உள்ள மருத்துவரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பின் வைத்தியர் தனது தந்தைக்கும் சம்மாந்துறை மருத்துவமனையில் பணிபுரியும் தனது நெருங்கிய நண்பருக்கும் மருத்துவரின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார் தன்னை துஷ்பியோகம் செய்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளதாக பொலிசார் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே நேற்று விடயங்களை ஆராய்ந்த நீதிவான் சந்தேக நபரை 48 மணிநேரம் தடுப்பு காவல் விசாரணைக்கு அனுமதி அளித்திருந்துள்ளார்.